என் வாழ்க்கையில் எங்கும் இருள்… வாழ்க்கை கசப்பானது…
என் வாழ்க்கை எந்த வழியே போகுது என்று எனக்கே தெரியலே…
எல்லோரும் என்னை நெருக்குகிறார்கள்…

வாழ்க்கையே சூன்யமாக உள்ளதா… கண்ணீரின் பாதைதான் எனக்கா-?… என்று கேள்விகளோடு உள்ள சகோதரனே, சகோதரியே!
430 வருடங்கள் எகிப்தில் அடிமைகளாக வாழ்ந்த இஸ்ரவேல் மக்களை, கர்த்தர் எகிப்தை விட்டு புறப்படச் சொன்னார், (யாத்திராகமம் 12:41,51). ஆனால், அவர்களை கர்த்தர் வனாத்திரத்தின் வழியாக சிவந்த சமுத்திரத்தின் பாதையில் வழி நடத்தினார். இன்னும் சொல்லப் போனால் சுற்றி போகும் பாதையில் (கானானுக்கு செல்லும் நேர் வழி அல்ல) (யாத்திராகமம் 13:18) வழிநடத்தினார்.

முதலில், போக விட்ட பார்வோனும் அவனுடைய சேனைகளும், பின்பு மனம் மாறி இஸ்ரவேல் மக்களை விரட்ட ஆரம்பிக்கிறார்கள். 430 வருடங்கள் அடிமைகளாக இருந்தவர்களை போக விட மனசு வருமா-? வனாந்திரத்தின் பாதை, முன்பாக சிவந்த சமுத்திரம், பின்பாக ஆக்ரோஷமான பார்வோனின் எகிப்து சேனைகள். இஸ்ரவேல் மக்கள் மிகவும் பயந்தார்கள். (யாத்திராகமம் 14:10). எங்களை சாகடிக்கவா கூட்டிக் கொண்டு வந்தீர் என்று மோசேயிடம் கேள்வி மேல் கேள்விகளைக் கேட்டார்கள், (யாத்திராகமம் 14:11,12). எத்தனை நெருக்கமானதும் சோகமானதுமான சூழ்நிலை அவர்கள் எதிர் கொண்டார்கள்.

ஆனால் அவர்களை வழி நடத்தி வந்த அவர்களின் தலைவனான மோசேக்கு தேவனுடைய திட்டம் அறிந்ததால், அவர் கூறும் விசுவாச வார்த்தைகளைப் பாருங்கள். அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள். கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான், (யாத்திராகமம் 14:13,14).

சகோதரனே சகோதரியே மோசேயைப் போன்று நீங்களும் உங்கள் வாழ்வில் கண்ணீரின் பாதையில் செல்லும்போது, நமக்காக கர்த்தர் யுத்தம் செய்வார் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். மோசே அவர்களும் அநேக பாடுகளுக்கு ஊடாக தேவன் அவரை தெரிந்து கொண்டார். அவர் சாதாரண ஆடுகளை மேய்ப்பவராக இருந்தார் (அழைக்கும்போது), (யாத்திராகமம் 3:1), அவரை எரிகிற முட் செடியிலிருந்து அழைக்கும் முன் எகிப்தினை கொலை செய்தவராயிருந்தார், (யாத்திராகமம் 2:12). அதனால் பார்வோன் அரண்மனையை விட்டு மீதியானியரின் தேசத்தில் ஓடி ஒளிந்தவர், (யாத்திராகமம் 2:10). எகிப்திலே ஜனங்கள் கஷ்டபடுவதைக் கண்ட கர்த்தர் அவர்களை விடுவிக்க மோசையை தலைமை பொறுப்பைக் கொடுத்து அழைத்தார், (யாத்திராகமம் 3:7&10). ——

அழைப்பிற்கு முன்பு மோசேயிடமிருந்த குறைபாடுகள்

  • தான் அதற்குத் தகுதியில்லாதவன் என்று எண்ணினார், (யாத்திராகமம் 3:7&12).
  • யார் அனுப்பினார்கள் என்று கேட்டால், கர்த்தரை யாரென்று சொல்ல வேண்டும் குழம்பியிருந்தார். கர்த்தருடைய பெயர் அறியாதவராயிருந்தார், (யாத். 3:13).
  • மக்கள் நம்ப மாட்டார்கள் என்று சாக்கு கூறியவர், (யாத். 4:1).
  • திக்கு வாயும் மந்த நாவும் உள்ள பேசத் தெரியாதவர் என்று கூறினார், (யாத். 4:10).
  • வேறு ஒருத்தரை அனுப்ப கேட்டுக் கொள்கிறார், (யாத். 4:13).
    மேற்கண்ட குறைகள் உண்மையிலே மோசேக்கு இல்லாமல் இல்லை, ஏனென்றால் கர்த்தர் அவர் சொன்ன சாக்கிற்கு மறுப்பேதும் கூறவில்லை. குறையுள்ளவராயிருந்தவரையே ஒரு பெரும் கூட்ட ஜனங்களை (24 இலட்ச மக்கள் என்று வேத ஆராய்ச்சியார்கள் கூறுகிறார்கள்) வழி நடத்த கர்த்தர் உயர்த்தினாரே.

சகோதரனே சகோதரியே உன் கண்ணீருக்கு பதில் சந்தோஷத்தையும், உன் அவமானத்திற்குப் பதில் உயர்வையும் உண்டாக்குவார். எப்படி?

சிவந்த சமுத்திரத்தையே தேவன் பிளந்து வழி உண்டாக்கினார். மோசே தன்னிடமிருந்த கோலை நீட்ட சிவந்த சமுத்திரம் பிரிந்து வெட்டாந்தரையாக்கி, இரண்டு பக்கமும் மதிலாக தண்ணீர் நின்றது, (யாத்திராகமம் 14:16&22). உலர்ந்த வெட்டாந்தரையின் வழியாக இஸ்ரவேலர் அனைவரும் பாதுகாப்பாக கடந்து சென்றார்கள், ஆனால், பின் தொடர்ந்து வந்த பார்வோன் சேனைகளைத் திரும்பவும் மோசே தன்னிடமிருந்த கோலை நீட்ட, சிவந்த சமுத்திரம் மூடிக் கொண்டது, அதில் பார்வோனின் சேனை அனைத்தும் கடலின் நடுவில் மூழ்கடித்து இறந்து போனார்கள், (யாத். 14:23&30).

வழி திறக்கும் அதிசயம் நடந்திடுமே. உங்களுக்கு எதிராக நின்ற செங்கடலும் திறந்தே வழி விடுமே. கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்வார். நீங்கள் யுத்தம் செய்ய வேண்டியதில்லை. மோசேயைப் போல் உங்கள் பிரச்சினைக்களுக்கு ஏதிராக கர்த்தருடைய கோலை (விசுவாசத்தைக்) காட்டுங்கள். அதிசயமாக வழி பிறக்கும்.

கிறிஸ்துவின் இராஜ்யத்தைக் கட்டும் சிற்பிகளில் ஒருவன்,
சுவிசேஷகர் யோவான் காந்தி இரா
சுவிசேஷகர்
நங்கூர ஊழியங்கள்

R Yovan Gandhi, Evangelist